நெல் மூட்டைகளைப் பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

by Editor / 25-06-2021 05:08:46pm
 நெல் மூட்டைகளைப் பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்



மதுரை மாவட்டம், தோப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்தவெளிக் களத்தில் வைக்கப்பட்டதன் காரணமாக, மழையில் நனைந்து சேதமடைந்தன. உடனே உணவுத்துறை அமைச்சர், தோப்பூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்தச் சூழ்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில், திறந்த வெளியில் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டும், மூடப்படாமலும், குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், இவை அனைத்தும் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கடும் மழையில் நனந்து சேதமடைந்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை முன்கூட்டியே தினசரி அறிவிக்கின்ற சூழ்நிலையில், இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இதுபோன்ற சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. இதனை மீண்டும் சரிசெய்ய அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும்.
இதுபோன்ற நிலைமை இனிமேல் ஏற்படாமல் இருக்க, இந்திய வானிலை ஆய்வு மையம் தினசரி தரும் தகவல்களின் அடிப்படையில், திறந்தவெளிக் களங்களில் உள்ள நெல் மூட்டைகளை மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான கிடங்குகளிலோ, அல்லது காலியாக உள்ள பாதுகாப்பான அரசு கட்டிடங்களிலோ வைக்கவும், எதிர்கால திட்டமாக ஆங்காங்கே கிடங்குகளை கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via