15 லட்சத்துக்கு புலித்தோலை விற்க முயற்சி 4 பேர் கைது.

by Staff / 22-11-2022 12:00:05pm
15 லட்சத்துக்கு புலித்தோலை விற்க முயற்சி 4 பேர் கைது.

கோவையில் இருந்து புலித்தோல் ஒன்றை நாகர்கோவிலுக்கு கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்போவதாக மத்திய வனஉயிரின குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதுபற்றி நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட வன அதிகாரி இளையராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உத்தரவின் பேரில் புலித்தோல் விற்க முயற்சிக்கும் கும்பல் குறித்து வனகாவலர்கள் விசாரணை நடத்தி, ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த கும்பல் தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து வனத்துைறயினர் நேற்று காலை தம்மத்துக்கோணத்தில் உள்ள வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 பேர் மட்டுமே இருந்தனர். அவா்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். அதைத்தொடர்ந்து அந்த வீட்டில் அவர்கள் சோதனை போட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் புலித்தோல் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து புலித்தோலை பறிமுதல் செய்த அதிகாரிகள், வீட்டில் இருந்த 2 பேரையும் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நாகர்கோவில் ராமபுரம் பகுதியை சேர்ந்த செந்தில் சுப்பிரமணியன் (வயது 38) மற்றும் தூத்துக்குடி டி. எம். பி. காலனியை சேர்ந்த இம்மானுவேல் தனராஜ் ( 34) என்பதும், அவர்கள் கோவையில் உள்ள ஒரு தொழில் அதிபர் வீட்டில் இருந்து புலித்தோலை வாங்கி வந்து நாகர்கோவிலில் விற்க முயன்றதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மார்த்தாண்டம் அருகே உள்ள நல்லூர் பகுதியை சோ்ந்த ரமேஷ் (36), நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சோ்ந்த ஜெயகுமார் (51) ஆகியோரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரையும் வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: - கோவை மாவட்டத்தில் இருந்து ஒருவரிடம் புலித்தோலை வாங்கி நாகர்கோவிலில் ரூ. 15 லட்சத்துக்கு விற்பனை செய்ய பேரம் பேசி உள்ளனர். இதற்கு புரோக்கராக செயல்பட்டவர் நாகர்கோவிலை சேர்ந்த செந்தில் சுப்பிரமணியன் ஆவார். கடந்த 19-ந் தேதியன்று 4 பேரும் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு புலித்தோலை கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்கள் தம்மத்துக்கோணம் பகுதியில் தங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 2 பேரை முதலில் கைது செய்தோம். கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின்பேரில் கடத்தலில் தொடர்புடைய ரமேஷ் மற்றும் ஜெயகுமாரும் கைதாகி உள்ளார்கள். மேலும் அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via