போலீஸ் வாகனத்தை எடுத்து சென்று பணம் பறித்த 3 பேர் கைது.

by Staff / 02-12-2022 02:51:09pm
போலீஸ் வாகனத்தை எடுத்து சென்று பணம் பறித்த 3 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது 24). இவர் கருங்கல் பஸ் நிலையம் அருகே உள்ள வேன் ஸ்டாண்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அஸ்வின் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது போலீஸ் வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அஸ்வினை வழிமறித்து ரூ. 2 ஆயிரத்தை பறித்து சென்றது. இந்த கும்பல் மீது அஸ்வினுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அஸ்வின் போலீஸ் வாகனத்தையும் அதிலிருந்த கும்பலையும் செல்போனில் படம்பிடித்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் தப்பி சென்று விட்டது. நடந்த சம்பவம் குறித்து அஸ்வின் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அஸ்வின் செல்போனில் பதிவு செய்திருந்த அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அஸ்வினிடம் பணம் பறித்த கும்பல் பயன்படுத்தியது குலசேகரம் போலீஸ் நிலைய வாகனம் என்பது தெரிய வந்தது. குலசேகரம் போலீஸ் நிலையத்தில் உள்ள வாகனத்தை பழுது நீக்குவதற்காக ஒர்க் ஷாப் ஒன்றில் விட்டு இருந்தனர். வேலை முடிந்த பிறகு அந்த வாகனத்தை அங்கு நிறுத்தி இருந்தனர். ‌அந்த வாகனத்தை சிலர் எடுத்து செல்வது போன்ற காட்சிகள் சி. சி. டி. வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் போலீஸ் வாகனத்தை எடுத்துச் சென்றது காஞ்சிரக்கோடு பகுதியைச் சேர்ந்த போஸ்கோ டைசிங் (38), ரூபன் (38), விஷ்ணு (27), கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஹிட்லர் (45)என்பது தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. டி. எஸ். பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போஸ்கோ டைசிங், ரூபன், விஷ்ணு ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வாகனத்தை அந்த பகுதியில் இருந்து எடுத்து சென்று கருங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றதாகவும் திரும்பி வரும் வழியில் அஸ்வினிடம் பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது. தலைமறைவாகியுள்ள ஹிட்லரை தேடி வருகி றார்கள். போலீஸ் வாகனத்தில் சென்று வாலிபரி டம் பணம் பறித்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

 

Tags :

Share via