வயிற்றுக்குள் போதை பொருளை கடத்திய பெண்

by Staff / 17-12-2022 03:27:19pm
வயிற்றுக்குள் போதை பொருளை கடத்திய பெண்

ஹெராயின் போதைப் பொருளை 90 கேப்சில்களில் அடைத்து, அந்த கேப்சூல்களை விழுங்கி, வயிற்றுக்குள் மறைத்து வைத்து கொண்டு வந்த வெளிநாட்டுப் பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை.
சார்ஜாவில் இருந்து கல்ப் ஏர்வேஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பயணி சுற்றுலா பயணியாக, இந்த விமானத்தில் சார்ஜா வழியாக சென்னை வந்தார்.சுங்க அதிகாரிகளுக்கு அந்தப் பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பயனியை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் பயணி மருத்துவ சிகிச்சைக்காக வந்திருப்பதாக கூறினார். ஆனால் அதற்கான சான்றிதழ்கள் எதுவும் இல்லை. இதனால் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில், அவருடைய உடமைகளை முழுமையாக சோதனை இட்டனர்.உடமைகளில் எதுவும் இல்லை.ஆனாலும் சந்தேகம் தீராமல், அவரை விமான நிலைய மருத்துவ மனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் ஏராளமான கேப்சல்கள் விழுங்கி வந்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து அந்த பெண் பயணியை வெளியில் விடாமல், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண் பயணியை இரண்டு நாட்களாக மருத்துவமனையில் வைத்து, இனிமா கொடுத்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் உள்ள கேப்சல்களை முழுமையாக வெளியில் எடுத்தனர்.அந்தப் பெண் பயணி வயிற்றுக்குள் இருந்து மொத்தம் 90 கேப்சல்கள் வெளியே எடுத்தனர். அந்த கேப்சல்களை உடைத்து பார்த்த போது, அதற்கு ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். 90 கேப்சல்களிலும் 902 கிராம் எடையுடைய ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 6. 31 கோடி. இதை அடுத்து அந்த பெண் பயணியை கைது செய்த சுங்க அதிகாரிகள், அவரை மேலும் விசாரணை நடத்துகின்றனர். அந்தப் பெண் பயணி எந்த நாட்டை சேர்ந்தவர்? என்ற விவரம் சுங்க அதிகாரிகள் இதுவரை தெரியப்படுத்தவில்லை. ஆனால் இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்த பெண் பயணி என்பதும் மற்றும் தெரிய வருகிறது.

 

Tags :

Share via