கோவாக்சின் தடுப்பூசி  வாங்கும்  ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிரேசில்

by Editor / 30-06-2021 05:22:17pm
  கோவாக்சின் தடுப்பூசி  வாங்கும்  ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிரேசில்

 


இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி வழங்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோவாக்சின் முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு வாங்கவும் பிரேசில் முடிவு செய்தது.ஆனால், ஃபைஸர் தடுப்பு மருந்துடன் ஒப்பிடுகையில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் விலை அதிகமாக இருப்பதாகவும் லட்சக்கணக்கானோர் பிரேசிலில் கரோனாவால் உயிரிழந்த நிலையில் தடுப்பூசி விவகாரத்தில் அதிபர் ஊழல் செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.
இது தொடர்பாக பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சகோதரர்களுமான லூயிஸ் ரிகார்டோ மிராண்டாவும், லூயிஸ் மிராண்டாவும், அதிக விலை கொடுத்து பாரத் பயோடெக்கின் கோவாக்சினை கொள்முதல் செய்ய என்ன அவசியம் என்று கேள்வி எழுப்பினர்.
பிரேசில் நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. பிரேசில் அரசுக்கும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் இடைத்தரகராக செயல்படும் பிரேசிலின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் என்ற நிறுவனம் கோவாக்சின் ஒப்பந்தம் மூலம் பெரும் லாபம் ஈட்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
ஆனால் பாரத் பயோடெக் நிறுவனம் இதனை திட்டவட்டமாக மறுத்தது. ‘‘பிரேசில் நாட்டுக்கு கோவாக்சின் விநியோகித்ததில் எவ்விதமான ஊழலும் நடக்கவில்லை. அத்தகைய புகார்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். மேடிசன் பயோடெக் நிறுவனம் எங்களின் சர்வதேச வர்த்தகத்தைக் கவனிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தம் பெரும் சர்ச்சையைானதையடுத்து அதனை ரத்து செய்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கோவாக்சின் கரோனா தடுப்பு மருந்தை 324 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via