எருது விடும் விழா அனுமதி விவகாரம்  இளைஞர்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு.

by Editor / 02-02-2023 02:38:56pm
எருது விடும் விழா அனுமதி விவகாரம்  இளைஞர்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோபசந்திரம் என்னுமிடத்தில் இன்று எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்து வரப்பட்டன.

இதையடுத்து முறையாக அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறை தரப்பில், எருதுவிடும் விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இளைஞர்கள் மற்றும் போலிசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் அனைவரையும் விரட்டி அடித்தனர்.

இதன் பின்னர் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பண்டிகைக்கு அனுமதிக்க வேண்டும் என கற்களை குவித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டதையடுத்து, தற்போது எருது விடும் விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது எருது விடும் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு வருவதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து வருகின்றனர்.

இருந்தும் எருது விடும் விழாவுக்கு அனுமதி அளித்து விழா நடைபெற்று வரும் நிலையிலும், கோபசந்திரம் பகுதியில் போராட்டகாரர்கள் விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணகிரி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகங்கள் அணிவகுத்து நின்றதோடு, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு, கோபசந்திரம் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. பிறகு ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். காவல்துறையினரின் இந்த 2 மணி நேர முயற்சிக்கு பிறகு போக்குவரத்துக்கு சரிசெய்யப்பட்டு அனைவரும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் 20-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via