நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தினசரி சந்தை கடைகள் அடைப்பு.

by Editor / 08-02-2023 03:02:59pm
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தினசரி சந்தை  கடைகள் அடைப்பு.

கோவில்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் தினசரி மார்க்கெட்டை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.84 கோடி மதிப்பில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மார்க்கெட்டை கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்கு தற்காலிகமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடமாற்றம் செய்வதற்கு தடையாணை பெற்றனர்.

இந்நிலையில்  நகராட்சி தினசரி சந்தையில் தற்போது கடைகள் நடத்தி வரும் அனைத்து கடைக்காரர்களுக்கும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும். தினசரி மார்க்கெட் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின், ஏற்கெனவே மார்க்கெட்டில் கடைகள் நடத்தி வருபவர்களுக்கு உரிய முறையில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிய கட்டடத்திற்கான வரைபடம் குறித்த நகலை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும். மார்க்கெட் புதுப்பிப்பு பணி நடைபெறுவது குறித்து பொதுமக்கள், வணிகர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி. பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன் படி தினசரி சந்தையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via