அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்

by Staff / 15-02-2023 01:49:54pm
அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்

திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள இரண்டு ஏ.டி.எம் மையம், கலசப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையம் மற்றும் போளூர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையம் ஆகிய பகுதிகளில் 82 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநில “மேவாட்” கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து ஒரு நபர் இறங்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இதையடுத்து கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை தனிப்படை போலீசார் விரைந்து பிடித்து விடுவதாகவும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று ஹரியானா மாநிலம் நூக் மாவட்டம் மேவாட் என்ற பகுதியை சார்ந்த கொள்ளை கும்பல்தான் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இந்த கொள்ளை கும்பல், திருடப் பயன்படுத்தப்பட்ட கார்களுடன் கண்டெய்னர் லாரிகளில் ஆந்திர மாநிலத்தை கடந்து சென்றது தெரியவந்தது . இதனால் கொள்ளையர்கள் வாகனம் குறித்து ஆந்திரா தெலங்கானா எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் கொல்லையில் ஈடுபட்ட வட மாநில கும்பல் ஆந்திரா வழியாக கர்நாடக மாநிலம் சென்று அங்கு கேஜிஎப் பகுதியில் தங்கி இருந்து பின்னர் அங்கிருந்து வட மாநிலம் தப்பிச் சென்றுள்ளனர். இதனை கண்டுபிடித்த தமிழ்நாடு தனிப்படை போலீசார் ஏடிஎம் கொள்ளை கும்பல் கேஜிஎப் பகுதியில் இருந்து தப்பிச் செல்ல உதவியாக இருந்த நபரை அடையாளம் கண்டு இன்று கைது செய்துள்ளனர் . மேலும் கேஜிஎப் நகரில் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் தமிழ்நாடு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via