வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

by Staff / 15-02-2023 02:42:21pm
வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்துத் துறை அலுவலர்களுடன் முதல்வர்  மு. க. ஸ்டாலின் புதன்கிழமை, வியாழக்கிழமை  ஆய்வு மேற்கொள்கிறார்.

இதையொட்டி, சென்னையில் இருந்து சேலத்திற்கு தனி விமானம் மூலம் முதல்வர் வந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த முதல்வருக்கு தமிழக காவல்துறைத் தலைவர் சி. சைலேந்திரபாபு, சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனையடுத்து, சேலம் புறப்பட்ட முதலமைச்சர் திடீரென ஓமலூர் – மேட்டூர் பிரதான சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முன் அறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் இறையன்புவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். வருகைப் பதிவேட்டினை பார்வையிட்ட முதலமைச்சர் அதிகாரிகள் பணியாற்றும் விதம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், பட்டா மாறுதல் உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர், அரசின் நலத்திட்டங்கள் ஓமலூர் தாலுகாவில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளன, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஓமலூர் வட்டாட்சியர் வல்லமுனியப்பனிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து வருவாய் கிராமங்கள் வாரியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேலும் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக காத்திருந்த பொதுமக்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர், எப்போது மனு வழங்கப்பட்டது, உடனடியாக தீர்வு காணப்பட்டதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.   அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.முதல்வரின் ஆய்வின் போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்

 

Tags :

Share via