3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு

by Staff / 01-03-2023 03:12:15pm
3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு

குண்டலபுலியூர் காப்பக மேலாளர் உட்பட 3 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூரில் 'நல்ல சமேரியர் சாரிட்டபிள் டிரஸ்ட்' சார்பில் அனுமதியின்றி, மனநல காப்பகம் இயங்கி வந்தது. ஆதரவற்றோரை சித்ரவதை செய்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்கள் காப்பகத்தின் மீது கூறப்பட்டது. இவ்வழக்கில் காப்பக நிர்வாகி ஜூபின் பேபி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை, கடந்த 25ம் தேதி, சி. பி. சி. ஐ. டி. , போலீசார் காவலில் எடுத்தனர். விசாரணை முடிந்து, நேற்று முன்தினம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், காப்பக மேலாளர் பிஜிமோன், பணியாளர்கள் ஐயப்பன், கோபிநாத் ஆகியோரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட சிறையில் உள்ள 3 பேரும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி புஷ்பராணி 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், ஜூபின்பேபி வியாபார நோக்கத்தில், அவரது காப்பகத்தில் இருந்தவர்களை செஞ்சி, திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், செஞ்சி, திருவண்ணாமலை காப்பகங்களுக்குச் சென்று குண்டலபுலியூர் காப்பகத்தில் இருந்து அனுப்பப்பட்டவர்களின் விபரம் குறித்து சி. பி. சி. ஐ. டி. , போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்

 

Tags :

Share via