புதிய கல்வியாண்டு தொடங்கும் முன் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குக அன்புமணி

by Staff / 31-03-2023 05:39:53pm
புதிய கல்வியாண்டு தொடங்கும் முன் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குக அன்புமணி

வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை, கல்வியாண்டு தொடங்குவதற்குள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது வருத்தமளிக்கிறது.
வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தரவுகளைத் திரட்டி 3 மாதங்களில் அறிக்கை அளிக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசு ஆணையிட்டது. ஆனால், இன்னும் 10 நாட்களில் கெடு முடியவிருக்கும் நிலையில் ஆணையம் பணியைத் தொடங்கக்கூட இல்லை.உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியவாறு வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தரவுகளைத் திரட்ட அதிகபட்சம் ஒரு மாதம் போதுமானது. ஆனால், ஓராண்டாகியும் தரவுகள் திரட்டப்படவில்லை; இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசு என்று கூறிக்கொள்கிறது. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் மட்டும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
முதல்வர் மு. க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு, புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக எம். பி. சி 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கும், பிற சமூகத்தினருக்கும் உள் இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via