கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

by Staff / 02-04-2023 01:00:17pm
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும்மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் பாலியல் தொல்லைகொடுப்பதாகப் புகார்கள்எழுந்தன. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.ஆனால், அந்த விசாரணையில், கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு, தேசியமகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு, காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டார்.
இதற்கிடையில், புகாருக்கு உள்ளான பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாநில மகளிர் ஆணையத் தலைவி குமரி விஜயகுமாரி நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது. குற்றச்சாட்டு உறுதியானால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்தார்.இதற்கிடையில், கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்திருந்தார்.இதையடுத்து, காவல் ஆய்வாளர் விஜயகுமாரி, பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். மேலும், ஹரிபத்மனைக் கைது செய்ய போலீஸார் முயற்சித்து வருகின்றனர். அவர் ஐதராபாத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, தனிப்படை அமைத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via