மக்கள் மன்றம் கலைக்கப்படும்;   ரஜினிகாந்த் திட்டவட்ட அறிவிப்பு

by Editor / 12-07-2021 03:33:30pm
 மக்கள் மன்றம் கலைக்கப்படும்;   ரஜினிகாந்த் திட்டவட்ட அறிவிப்பு

 


‘வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கு இல்லை’ என்று இன்று (திங்கள்) திட்டவட்டமாக அறிவித்திருக்கும் ரஜினிகாந்த், தன் பெயரிலான ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதாக பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில், தன் உடல்நிலையை காரணம்காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திடீரென அறிவித்தார். இதனைத்தொடர்ந்து 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். அதன் படப்பிடிப்பை முடித்த ரஜினி, 'டப்பிங்' பணியை ஆரம்பிப்பதற்குள், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பினார்.
இந்நிலையில், திங்கள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.
ஆலோசனை கூட்ட முடிவில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது .அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல உதவிகளையும், பல சாதனைகளையும் உருவாக்கினோம்.
காலச்சூழலால் நாம் எண்ணம் சாத்தியப்படவில்லை . வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்பு பணிகள் எதுவும் இன்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் .மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
‘‘வாழ்க தமிழ் மக்கள், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்” என்றும் அந்த அறிக்கையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via