பள்ளியை மூட அறிவிப்பு- பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

by Editor / 01-05-2023 12:54:52pm
பள்ளியை மூட அறிவிப்பு- பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

அரசு நிதி உதவி பெறும் பள்ளியை மூட அறிவிப்பு வெளியிட்ட பள்ளி நிர்வாகம்- எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பள்ளி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திரண்டதால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் லட்சுமி ஹரிஹர உயர்நிலைப்பள்ளி என்ற ஒரு பழமையான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அரசு நிதி உதவி பெறும் இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வந்த நிலையில் இந்தப் பள்ளியானது வருகின்ற கல்வி ஆண்டு முதல் மூடப்படுவதாகவும், இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர்கள் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும் படி இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

 இந்த விளம்பரத்தை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் தாங்கள் இத்தனை ஆண்டுகளாக படித்து வந்த பள்ளியை ஏன் மூடுகிறீர்கள்? தற்போது இந்த பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், தற்போது இந்த பள்ளியை மூடுவதால் இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் வெகு தொலைவில் சென்று கல்வி கற்க வேண்டிய சூழல் நிலவ வாய்ப்புள்ளது.

 ஆகையால், பள்ளியை மூடும் முடிவை அந்த பள்ளியின் நிர்வாகம் கைவிட வேண்டும் என கூறி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பள்ளியின் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களின் கோரிக்கையை பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துரைப்பதாக கூறினர்.

அதனைத் தொடர்ந்து, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற பொது மக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

பள்ளியை மூட அறிவிப்பு- பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
 

Tags :

Share via