ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு நடத்த தயார்

by Editor / 14-07-2021 08:28:31am
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு நடத்த தயார்

TET தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில், அந்தத் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகவில்லை.

அதேபோல், பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் TET தேர்வும் நடத்தப்படவில்லை. மேலும், கல்லூரி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் SET தேர்வும் நடத்தப்படாமல் பல இடங்களில் உதவிப் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட மற்றும் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை மீண்டும் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்காக அரசு கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது.
அத்துடன், வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான பயிற்சி மையங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு டியூசன் நடத்தாத பேராசிரியர்களின் பட்டியலை பாட வாரியாக அனுப்ப கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு, TRB உறுப்பினர் செயலர் சேதுராம வர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via