கிருத்திகா பட்டேல் தந்தையை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி.

by Editor / 03-05-2023 09:18:21pm
கிருத்திகா பட்டேல் தந்தையை  போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி.

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்த கிருத்திகா பட்டேல்-வினித் காதல் தம்பதினரை பிரித்து கிருத்திகா கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கிருத்திகாவின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், கிருத்திகாவின் பெற்றோர் முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்த நிலையில், அது தொடர்பான விசாரணையின் போது கிருத்திகாவை நேரில் ஆஜர் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

 ஆனால், அவரது உறவினர்கள் ஆஜர் செய்த காரணத்தினால் கோபம் அடைந்த நீதிபதிகள் கிருத்திகா பட்டேலை ஆணவ படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா என கேள்வி எழுப்பியதோடு அவரது பெற்றோர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

மேலும், கிருத்திகா பட்டேலின் பெற்றோரை கைது செய்து போலீசார் தேவைப்பட்டால் விசாரித்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்த நிலையில், தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் கிருத்திகாவின் பெற்றோரை கைது செய்வதற்காக குஜராத் விரைந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு கிருத்திகா பட்டேலின் தந்தையான நவீன் பட்டேல் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், அவரை விமானம் மூலம் திருவனந்தபுரம் அழைத்து வந்து அங்கிருந்து குற்றாலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.இன்று 29 ஆம் தேதி செங்கோட்டை நீதிமன்ற நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர் செய்தனர். நவீன் பட்டேலை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நவீன்பாடேலை குற்றாலம் போலீசார் அவரை போலீஸ் காவலுக்கு எடுப்பதற்காக செங்கோட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இரண்டாம் தேதி நீதிபதி அனுமதி அளித்த நிலையில் இன்று மூன்றாம் தேதி ஒரு நாள் போலீஸ் காவலுக்கு  அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக இரண்டு நாட்கள் தேவை என நீதிமன்றத்தில் மீண்டும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்கண்ணா அனுமதி கோரியதை தொடர்ந்து  நீதிபதி சுனில் ராஜா ஐந்தாம் தேதி மதியம் ஒரு மணி வரை நவீன் படேலை போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via