என் பேச்சைக் கேட்காததால் ஆட்சியை இழந்துவிட்டு நிற்கிறார்கள்: சசிகலா

by Editor / 14-07-2021 04:31:38pm
என் பேச்சைக் கேட்காததால் ஆட்சியை இழந்துவிட்டு நிற்கிறார்கள்: சசிகலா



என் பேச்சைக் கேட்காததால் அதிமுகவினர் ஆட்சியை இழந்துவிட்டு நிற்கிறார்கள் என சசிகலா 
பேசி இருக்கிறார். 
சமீபகாலமாக தொண்டர்களுடன் சசிகலா பேசி வருகிறார் . இந்த நிலையில் குவைத்தைச் சேர்ந்த சக்திவேல் ராஜன் என்கிற தொண்டருடன் சசிகலா பேசும்போது, 'இங்கு 19ஆம் தேதி வரை ஊரடங்கு போட்டுள்ளார்கள். தொடர்ந்து போட்டு வருகிறார்கள். இது முடிந்தவுடன் அம்மா (ஜெயலலிதா) சமாதிக்குச் சென்று பார்க்கவேண்டும். பின்னர் ஊர் ஊராகச் சென்று தொண்டர்களைச் சந்திக்க உள்ளேன்.
எம்ஜிஆர் பாடல்களில் அனைத்துக் கருத்துகளையும் சொல்லிவிடுவார். ஆகவே, சிறு வயதிலிருந்தே அவரது பாடல்களைப் பார்த்து அதன்படி நடக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் கட்சிக்கே உறுதுணையாக இருந்து அம்மாவுக்கு (ஜெயலலிதா) சேவை செய்யும் வாய்ப்பு நல்ல வழியில் நடந்தது.
அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் பிரச்சினை எல்லாம் ஏற்பட்டபோது, அவரது அரசைக் காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப்போடு நான் உடனடியாக அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்துவிட்டுதான் பெங்களூருவுக்குச் சென்றேன். திரும்ப வந்தபோது எல்லாப் பிள்ளைகளும் ஒற்றுமையோடு இருந்து இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னேன்.
ஆனால், அதைக் கேட்காமல் இன்று ஆட்சியை இழந்துவிட்டு நிற்கிறார்கள். எம்ஜிஆர் மறைவின்போது கட்சியைக் காப்பாற்றுகிற பொறுப்பு வந்தது. அதேபோன்ற சூழ்நிலை இப்போது மீண்டும் வந்துள்ளது. அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறேன்.
இது எனக்குப் புதிது இல்லை, ஏற்கெனவே இது அம்மாவுக்கு (ஜெயலலிதா) நடந்துதானே. இப்போது எனக்கு நடக்கிறது. நிச்சயம் நல்லபடியாக கட்சியைக் கொண்டு வந்துவிட முடியும், ஆட்சியையும் பிடிக்க முடியும். ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவந்து ஏழை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். தொண்டர்களுக்கு நிறைய செய்ய வேண்டும். நிச்சயம் நல்லபடியாகக் கொண்டு வந்துவிடுவேன்.
ஜெயலலிதா வரும்போது மூத்த அமைச்சர்கள் எதிர்த்தார்கள், ஜெயலலிதாவுக்குத் தொண்டர்கள் ஆதரவு அதிகம் இருந்தது. அதனால் நல்லபடியாக அவரைக் கொண்டு வந்தோம். முதல்வரானார். இப்போதும் அதேபோன்று நிலை உள்ளது. தொண்டர்கள் ஆதரவு நமக்கு அதிகம் உள்ளது'.
இவ்வாறு சசிகலா தொண்டர்களுடன் பேசினார்.

 

Tags :

Share via