ஆவடி நாசரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன்.. பரபரப்பு தகவல்கள்.

by Staff / 11-05-2023 11:58:26am
ஆவடி நாசரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன்.. பரபரப்பு தகவல்கள். 1980ஆம் ஆண்டுகளில் திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்த காலகட்டத்தில், அன்றைய ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக ஆவடி நாசர் இருந்தார். மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களிலும் அவருடன் சென்று வந்தார். 2016 தேர்தலில் அதிமுகவின் மாஃபா பாண்டியராஜனிடம் தோற்ற நாசர், 2021ல் வெற்றி பெற்று பால்வளத்துறை அமைச்சரானார்.அமைச்சராக பதவியேற்ற உடன், தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் ஆவின் இனிப்புகளை முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வீட்டுக்கு எடுத்து சென்று விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆவடி மாநகர செயலாளராக திமுகவில் கட்சி பொறுப்பை வகித்து வந்த ஆவடி நாசரின் மகன் ஆஷிம் ராஜா கடந்த பிப்ரவரி மாதம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அப்போதே நாசரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என செய்திகள் உலா வந்தன. ஆவடியில் உள்ள காவல்துறைக்கு சொந்தமான இடத்தில் திமுகவின் கொடியை நட்டு கடைகள் போடப்பட்டன.ஆவடி மாநகராட்சியில் வரும் அனைத்து டெண்டர்களையும் தாங்களே எடுத்துக் கொண்டது, மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் அலைகழிப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் ஆவடி நாசரின் மகன் மீது வைக்கப்பட்டன. இவை தவிர துறை ரீதியாகவும் ஆவடி நாசர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.ஆவின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 25,410 மெட்ரிக் டன் பால் பவுடரையும், 6 டன் வெண்ணையையும் குறைவான விலைக்கு 2 ஆண்டுகளில் விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சுமார் 28 லட்சம் லிட்டர் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பால் ஊற்றுவதால் ஆவின் நிறுவனத்துக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை சமாளிக்க மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பால் பவுடரை வாங்கி ஆவின் நிறுவனம் பால் தயாரித்து வருகிறது.பால் பவுடர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் ஒரு லிட்டர் பாலுக்கு 60 ரூபாய் வரை செலவாகும் நிலையில், அது 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு லிட்டர் பாலுக்கு அரசுக்கு 18 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுகிறது. இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க, பால், ஐஸ்கிரீம், வெண்ணை போன்ற பொருட்களின் விலை நான்கு முறை அதிகரிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆரஞ்சு பால் விலையும் லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.இந்த பாதிப்புகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் நெருக்கடியில் இருந்து துறையை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததால், அமைச்சர் மாற்றப்படுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நாசர், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் நடந்த திமுக பொதுக்கூட்ட மேடையில் ஏறாமல், அப்படியே காரில் வேகமாக கிளம்பி சென்றார். அதனை தொடர்ந்து நடந்த இரண்டு கூட்டங்களில் சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு வாடிய முகத்துடன் கிளம்பி சென்றார்.முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கட்சிக்காரர் நாற்காலி எடுத்து வர தாமதமானதால், அவரை அடிக்க கல்லைக் கொண்டு ஓங்கியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மகனின் தனி ஆவர்த்தனமும், நிர்வாக காரணங்களும் சேர்ந்து ஆவடி நாசரின் அமைச்சர் பதவியை காலி செய்ததாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Tags :

Share via