ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

by Editor / 24-07-2021 03:47:00pm
ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.


நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிஉஅ நீதிபதி, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரை ஹெச். ராஜா அவதூறாக பேசியிருப்பதாக குறிப்பிட்டார். மேலும் மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் சம்மன் தான் அனுப்பியுள்ளது எனவே, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.


கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹெச்.ராஜா சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. அது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீதும் பல்வேறு நபர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காக ஏற்கனவே ஹெச்.ராஜா தரப்பில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியிருந்தார்.


இந்நிலையில் தற்போது, இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்ற பத்திரிக்கையில் ஹெச்.ராஜா தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ளது என ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக கீழமை நீதிமன்றம் ஜுலை 27ல் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.


எனவே, இந்த வழக்கில் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டி ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் முன் ஜாமீனுக்காக, நீதிமன்றம் விதிக்கும் அனைத்து விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவேன் என உறுதியளிப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். ஆகவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என ஹெச்.ராஜா மனுவில் கோரிக்கை விடுத்திருத்தார். ஆனால் ஹெச்.ராஜாவின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via