கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றிச்சென்ற வாகனங்கள் சிறைபிடிப்பு

by Staff / 13-09-2023 12:29:14pm
கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றிச்சென்ற வாகனங்கள் சிறைபிடிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் தினமும் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலையில் தக்கலை, சித்திரங்கோடு, முட்டைக்கோடு, செம்பருத்திவிளை வழியாக கனிமவளங்கள் ஏற்றிய கனரக லாரிகள் சென்றன. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு பிறகு பள்ளி வாகனங்கள் செல்ல தொடங்கிய பிறகும், கனரக லாரிகள் சென்றதால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்ல முடியாமல் தவித்தனர். அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கோதநல்லூர் பேரூராட்சி தலைவி கிறிஸ்டல் பிரேமகுமாரி, துணை தலைவர் டேவிட் மற்றும் பொதுமக்கள் திரண்டு செம்பருத்திவிளை சந்திப்பில், கனரக லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கனரக லாரிகள் வரிசையாக சாலையில் நின்றதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொற்றிகோடு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கனரக வாகனங்கள் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

 

Tags :

Share via