முருகனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை-அரசு

by Staff / 15-09-2023 01:51:22pm
முருகனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை-அரசு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது. இதில் இலங்கை நாட்டின் பிரஜைகளான முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் லண்டனில் வசிக்கும் தங்களது மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் தனது கணவர் முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிபதி என். சேஷசாயி, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில ளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசின் வெளிநாட்டினருக்கான பதிவு அலுவலக மண்டல அதிகாரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘‘முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட 4 பேரும் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கள்ளத்தோணி மூலமாகவே இந்தியாவுக்குள் வந்துள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் திருச்சி அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் கிடைத்ததும் இவர்கள் 4 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via