இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார்.

by Staff / 17-09-2023 01:14:11pm
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார்.

 தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 11 கோடி ரூபாயில் 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனையும் சேர்த்து  176 கோடி ரூபாயில் 3500 புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,  வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் 79 கோடியே 90 லட்ச ரூபாயில் 1591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்றது.  பயனாளிக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடுகளை ஒப்படைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னதாக வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வெளியே உள்ள,  தந்தை பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அதன் பின்னர் அவர் மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1591 புதிய வீடுகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். மேல்மொணவூர் முகாமை சேர்ந்த பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.  தொடர்ந்து அங்குள்ள ஒரு புதிய வீட்டையும் முதலமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். வேலூர் மேல் மொணவூரில், இரண்டு இரண்டாக கட்டப்பட்டுள்ள வீடுகளில் இரண்டு தனித்தனி கழிவரைகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஹால் , ஒரு தனியறை மற்றும் ஒரு சமையலறை அமைந்துள்ளது. இவ்வீடுகள் இன்று ஒப்படைக்கப்படுகின்றன. 
             இந்நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறுபான்மைத் துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை  அமைச்சர் செஞ்சி. மஸ்தான். வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்  கலாநிதி வீராசாமி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M. கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பயனாளிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
          இதனை தொடர்ந்து   தனியார் நட்சத்திர ஓட்டலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கவுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  மாலை 5 மணி அளவில் பள்ளி கொண்டா அருகே உள்ள கந்தனேரியில் நடைபெறும் திமுக  முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார். விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு.  துணைச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் , கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் , ஏ.வ.வேலு,  காந்தி மற்றும் மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு பின்னர் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து இரவு ரயில் மூலம் முதலமைச்சர்  சென்னைக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வருகையை ஒட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பார்வையில், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், உட்பட   , 12 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சர் செல்லும் வழி எங்கும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன நெரிசலை தவிர்க்க வேலூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Sp மணிவண்ணன் உத்தரவின் பேரில வேலூரில் டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via