உபியில் விபத்து : நின்ற பஸ் மீது லாரி  மோதி 18 பேர் பலி

by Editor / 28-07-2021 04:30:18pm
 உபியில் விபத்து : நின்ற பஸ் மீது லாரி  மோதி 18 பேர் பலி

 

உத்தரப்பிரதேசத்தில், பழுதாகி நின்ற பஸ் மீது மின்னல் வேகத்தில் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில், பஸ்சின் முன்பு சாலையில் தூங்கிக் கொண்டிருந்த 18 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.


இந்த கோர விபத்து குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "உத்தரப் பிரதேசத்தின் லக்னோ - அயோத்யா தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரிட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பஸ் ஒன்றில் வந்துள்ளனர்.


அவர்கள் பயணித்த பஸ்சில் பழுது ஏற்பட்டதால், சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டது. நள்ளிரவு என்பதால் பஸ்சின் முன்பக்க சாலையில், தொழிலாளர்கள் பலர் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலை 1.30 மணியளவில், மின்னல் வேகத்தில் வந்த லாரி ஒன்று பஸ்சின் பின்புறம் மோதியுள்ளது.


இந்த பயங்கர விபத்தில் பஸ்சின் முன் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 18 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்; 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது."


இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வருடன் பேசியுள்ளதாகவும், காயமடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via