டிசம்பர் 4ல் வாதங்களை தொடங்க வளர்மதி தரப்புக்கு ஆணை

by Staff / 08-11-2023 01:38:04pm
டிசம்பர் 4ல் வாதங்களை தொடங்க வளர்மதி தரப்புக்கு ஆணை

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் டிசம்பர் 4ஆம் தேதி வாதங்களை தொடங்க வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2001-06ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ப. வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வளர்மதி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், எண்ணிடும் நடைமுறைகள் முடிந்துவிட்ட நிலையில் அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறினார். மேலும் வழக்கு குறித்த சில ஆவணங்களை பதிவுத்துறையிடமிருந்து பெறவேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதம் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் வழக்கில் வாதங்களை தொடங்க வேண்டுமென வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via