நிதி நிறுவன மோசடி வழக்குகளை கண்காணிக்க வலியுறுத்தல்: அன்புமணி

by Staff / 13-01-2024 02:13:25pm
நிதி நிறுவன மோசடி வழக்குகளை கண்காணிக்க வலியுறுத்தல்: அன்புமணி

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பணத்தைப் பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அனைத்து நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான வழக்குகளையும் விரைவுபடுத்தி, நிதிநிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களின் பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும். அதற்கான பணிகளை கண்காணிப்பதற்காக டிஜிபி நிலையிலான காவல் அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமிக்கவும் அரசு முன்வர வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாட்டில் மோசடி நிறுவனங்கள் காளான்களைப் போல உருவெடுத்து மக்களை ஏமாற்றுவதற்கான காரணங்களில் மக்களின் விழிப்புணர்வின்மை 10% என்றால், மீதமுள்ள 90% காவல்துறையின் அலட்சியம் தான். தமிழ்நாட்டில் மூடப்பட்ட நிதி நிறுவனங்கள் எதுவும் கடந்த மாதம் தொடங்கி இந்த மாதம் மூடப்பட்டவை அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே அந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிக வட்டி தருவதாகவும், பரிசுகளை அள்ளி வழங்குவதாகவும் அந்த நிறுவனங்கள் துண்டறிக்கைகள் மூலமாகவும், முழுபக்க விளம்பரங்கள் மூலமாகவும் தொடர் விளம்பரங்களை செய்தன. இவை எதுவும் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.

 

Tags :

Share via