சாத்தான்குளம் தனியார் தாதுமணல் குடோனில் சீல் உடைப்பு காவல் நிலையத்தில் புகார்.

by Editor / 15-02-2024 10:46:30am
சாத்தான்குளம் தனியார் தாதுமணல் குடோனில் சீல் உடைப்பு காவல் நிலையத்தில் புகார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட எம்.எல்.தேரி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பி எம் சி என்ற மணல் கம்பெனி இயங்கி வந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள தாதுமணல் நிறுவனங்கள் அனைத்தையும் மூடி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த பகுதியில் செயல்பட்டு வந்த நிறுவனமும் சீல் வைக்கப்பட்டது. 
அரசு சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளதால் மறு உத்தரவு வரும் வரை அந்த நிறுவனத்தில் எந்தவித உற்பத்தியோ அல்லது பராமரிப்பு பணிகளோ மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் வாரம் ஒரு முறை அதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் அரசூர் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் என்பவர் கடந்த 13ம் தேதி அந்த குடோனில் ஆய்வுக்காக சென்றுள்ளார். அப்போது அந்த தாதுமணல் உள்ள குடோனில் அரசு சார்பில் வைக்கப்பட்ட சீல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து தட்டார்மடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் சம்மந்தப்பட்ட கனிமவளத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.இதையடுத்து கனிமவளத்துறை உதவி இயக்குநர் ரகிமா தலைமையில், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு சென்றனர்.இந்த நிலையில் இன்றைய தினம் தட்டார்மடம் காவல்நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அந்த புகாரில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருவதாகவும் பி.எம்.சி.  நிறுவனத்தின் உள்பக்க குடோனில் தாது மணல் வைக்கப்பட்டு அரசால் சீல் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை வாரம் ஒருமுறை தான் கண்காணித்து வருவதாகவும், கடந்த 13ம் தேதி மாலை 4 மணி அளவில் இந்த நிறுவனத்தை ஆய்வு செய்தபோது நிறுவனத்தின் தாது மணல் இருப்பு வைக்கப்பட்ட குடோன் அரசால் பூட்டி சீல் வைக்கப்பட்ட கதவுகளில் இருந்த சீல் திருடும் நோக்கத்திற்காக உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்தது. இது தொடர்பாக தனது உயர் அதிகாரிகளுக்கும், தட்டார்மடம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தேன். இது தொடர்பாக நேற்றைய தினம் காலை கனிமவளத்துறை உதவி இயக்குனர் ரகிமா தலைமையில் சீல் உடைக்கப்பட்ட குடோனை ஆய்வு செய்தனர்.
நிறுவனத்தை ஆய்வு செய்தபோது திருடும் நோக்கத்திற்காக உடைக்கப்பட்ட தாது மணல் குடோனில் தாது மணல் திருடப்படவில்லை எனவும் திருடும் நோக்கத்திற்காக சீல் வைக்கப்பட்ட குடோனின் பூட்டை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் கனிமவளத்துறையினர் சீல் வைத்த தாதுமணல் குடோன் சீல் உடைக்கப்பட்ட சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : சாத்தான்குளம் தனியார் தாதுமணல் குடோனில் சீல் உடைப்பு காவல் நிலையத்தில் புகார்.

Share via