தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொள்ளை போவதை தடுக்க வேண்டும்- சீமான்

by Admin / 04-08-2021 02:29:08pm
தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொள்ளை போவதை தடுக்க வேண்டும்- சீமான்



   
அதிமுக ஆட்சிக்கு முற்றிலும் மாற்றெனக்கூறி ஆட்சியதிகாரத்திற்கு வந்த திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் போராட்டங்களுக்குப் பிறகும் வளவேட்டையைத் தடுக்காது வேடிக்கைப் பார்த்து நிற்பது சரியல்ல என சீமான் கூறியுள்ளர்.
:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அதானி குழுமத்தால் கேரளாவில் கட்டப்பட்டு வரும் விழிஞம் சர்வதேசத் துறைமுகத்திட்டத்திற்காக தமிழக மலைகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டப் பாறைகளைப் போக்குவரத்துத் தடையின்றி கொண்டு செல்ல அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள கேரள அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது.

அதனை அம்மாநில சட்டமன்றத்தில் வெளிப்படுத்தி உள்ள துறைமுக அமைச்சர் அகமது தேவர்கோவில்‌, அதானி குழுமத்தின் துறைமுகப்பணிகளுக்காக அந்தப்பாறைகளைக் கேரளாவுக்கு எடுத்துச் செல்வதில் தமிழகத்திலுள்ள சில மாவட்ட ஆட்சியர்களால் போக்குவரத்துச் சிக்கல் ஏற்படுகிறது. அதை சரிசெய்து தர வேண்டுமென்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் கனிமவளங்கள் சூறையாடப்படப்பட்டு முறைகேடாக கேரளாவிற்குக் கொண்டு செல்லப்படுவதற்கெதிராக மக்கள் தன்னெழுச்சியுடன் நாளும் போராடிக் கொண்டும், வாகனங்களை முற்றுகையிட்டு சிறைப்பிடித்துக் கொண்டுமிருக்கையில், வாகனங்களைக் கொண்டு செல்வதற்கு உள்ள கெடுபிடிகளைத் தளர்த்தக் கோரி கடிதமெழுதியிருக்கும் கேரள அரசின் செயல் கொந்தளிப்பையும், பெரும் சீற்றத்தையும் குமரி மண்ணின் மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

பாறைகளை ஏற்றிச் சென்ற பல கனரக வாகனங்கள் மீது அரசு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் அதனைத் தடுக்க முயன்ற நிலையில் அத்தகைய அதிகார வர்க்கத்தினரைக் கட்டுப்படுத்த வேண்டுமென கேரள அரசு தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதும், அதற்கு தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது ஆழ்ந்த அமைதியைக் கடைப்பிடிப்பதும் பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. அதிமுக ஆட்சிக்கு முற்றிலும் மாற்றெனக்கூறி ஆட்சியதிகாரத்திற்கு வந்த திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் போராட்டங்களுக்குப் பிறகும் வளவேட்டையைத் தடுக்காது வேடிக்கைப் பார்த்து நிற்பது சரியல்ல.

இனியும், இது தொடருமானால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்குமென அரசை எச்சரிக்கிறேன்.

வளக்கொள்ளையை அரசின் ஒப்புதலோடே செய்ய முயலும் கேரள அரசின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்திட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தி, மேற்குத்தொடர்ச்சி மலையைக் காக்க வேண்டும்.

வளக் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

Tags :

Share via