மோடியுடனான சந்திப்பு மனநிறைவாக உள்ளது   மு.க.ஸ்டாலின் விளக்கம்

by Editor / 17-06-2021 06:35:42pm
 மோடியுடனான சந்திப்பு மனநிறைவாக உள்ளது   மு.க.ஸ்டாலின் விளக்கம்


 

பிரதமர் மோடியுடனான சந்திப்பு மனநிறைவாக இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு டெல்லியுள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் என்னுடைய முதல் டெல்லி பயணம். கொரோனா பரவலின் காரணமாக பிரதமர் மோடியுடனான சந்திப்பு தாமதமாகியுள்ளது. 
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொற்று குறைந்ததால், மோடியை சந்திக்க நேரம் கேட்டேன். மனநிறைவை தரக் கூடிய சந்திப்பாக இருந்தது. முதல்வராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். எந்த கோரிக்கை என்றாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார். தமிழகத்தின் கோரிக்கைகளை அவரிடம் கொடுத்துள்ளோம். கூடுதலான தடுப்பூசிகள் வழங்கவேண்டும். குன்னூர், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை உடனே செயல்பட வைக்கவேண்டும். தமிழகத்துக்கான நிதியை உடனடியாக முழுமையாக தர வேண்டும். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளை தடை செய்யவேண்டும். மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது.
ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனடியாக தரவேண்டும். கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கவேண்டும். கோவையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முயற்சிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறவேண்டும். 
கொரோனா காலத்தில் வாழ்வாதரம் இழந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கவேண்டும். தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கவேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை நிர்ணயிக்கவேண்டும். சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும்.
சென்னை மெட்ரோ 2-ம் வழித் தடம் தொடக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஏழு தமிழர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து முடிவெடுப்போம். சில பிரச்னைகள் இரண்டு அரசுகள் இணைந்து செயல்பட்டு தீர்க்க வேண்டும். அந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று டெல்லி பயணம் நம்பிக்கை அளிக்கிறது. 
டெல்லியில் உள்ள தமிழ் ஊடகங்களும் தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாட வேண்டும். தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும். மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்படும்’என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via