தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளி திறக்க உத்தேசம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 06-08-2021 08:02:14pm
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளி திறக்க உத்தேசம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினர் கருத்துகளையும் கேட்டு செப்டம்பர் 1ம் தேதி 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளி திறக்க உத்தேசம் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு, கொரோனா கட்டுப்பாடுகள் நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போதுள்ள ஊரடங்கு வரும் 9ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்று பரவல், அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் முக்கிய தகவல்கள்

  • வெள்ளி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.
  • அனைத்து தரப்பு கருத்துக்களையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • இறைச்சி மற்றும் மீன் சந்தையில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
 

Tags :

Share via