பரமக்குடியில் முன்னாள் அதிமுக நிர்வாகி  வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை

by Editor / 07-08-2021 04:42:40pm
 பரமக்குடியில் முன்னாள் அதிமுக நிர்வாகி  வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை



ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.14 லட்சம் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.


போகலூர் முன்னாள் அதிமுக ஒன்றியச் செயலாளர் நாகநாதன். பரமக்குடியில் உள்ள இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார்  திடீர் சோதனை நடத்தினர். இவர் 14 ஆண்டுகள் இப்பதவியை வகித்தார். 2011 முதல் 2016 வரை போகலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும் இருந்துள்ளார். தற்போது மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவராக உள்ளார்.


இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதற்கிடையே போகலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக நாகநாதன் இருந்தபோது அரசுப் பணிகளில் ஊழல் நடந்ததாக, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில், ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிபதி அனுமதியுடன், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தலைமையில் போலீஸார், பரமக்குடிவேந்தோணி ரோடு முனியாண்டிபுரத்தில் உள்ள நாகநாதன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.


இதில் கணக்கில் வராத ரூ.14லட்சம், 88 பவுன் நகைகள், சொத்து ஆவணங்கள் மற்றும்நிரப்பப்படாத வங்கிக் காசோலைகள் கைப்பற்றப்பட்டன. பின்னர்நகைகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. இறுதியில் ரூ.14 லட்சம் மற்றும் சொத்து ஆவணங்கள், வங்கிக் காசோலைகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஎஸ்பி தெரிவித்தார்.

 

Tags :

Share via