இமாச்சல பிரதேச நிலச்சரிவு- இதுவரை 13 சடலங்கள் மீட்பு

by Admin / 12-08-2021 01:10:50pm
இமாச்சல பிரதேச நிலச்சரிவு- இதுவரை 13 சடலங்கள் மீட்பு

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வானிலை சீராக இருந்தால், ராணுவம் தனது ஹெலிகாப்டரை மீட்புப் பணியில் ஈடுபடுத்தும் என முதல்வர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. நேற்று கின்னார் மாவட்டத்தில் ரெக்காங் பியோ - சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு சரக்கு வாகனம் மற்றும் பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கிக்கொண்டன. அந்த வாகனங்களில் இருந்தவர்களில் பலர் மண்ணில் புதைந்தனர்.

இந்தோ - திபெத் எல்லை காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இமாச்சல் நிலச்சரிவு

இன்று காலை நிலவரப்படி 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 60 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

‘பேருந்தில் பயணம் செய்த பயணிகள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை.  பேருந்து இன்னும் இடிபாடுகளுக்குள் புதைந்து கிடக்கிறது. வானிலை சீராக இருந்தால், ராணுவம் தனது ஹெலிகாப்டரை மீட்புப் பணியில் ஈடுபடுத்தும். நான் இன்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட திட்டமிட்டுள்ளேன்’ என முதல்வர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்தார்.

 

Tags :

Share via