இன்னும் 90 நாட்களில் ஆப்கானிஸ்தான் தலைநகரை தலிபான்கள் கைப்பற்ற வாய்ப்பு -உளவுத்துறை தகவல்

by Admin / 12-08-2021 01:14:58pm
இன்னும் 90 நாட்களில் ஆப்கானிஸ்தான் தலைநகரை தலிபான்கள் கைப்பற்ற வாய்ப்பு -உளவுத்துறை தகவல்

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் முழு பலத்துடன் பதிலடி கொடுக்கும்பட்சத்தில் தலிபான்களின் வேகத்தை மாற்ற முடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் படிப்படியாக நாடு திரும்பி வருகிறது. தற்போது வரை 90 சதவீதம் படைகள் வாபஸ் பெறப்பட்டு விட்டன. அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதும், ஆப்கானில் தலிபான்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆப்கான் எல்லையோர பகுதிகளில் இப்போது தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானின் எல்லையோர மாகாணங்களை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தலிபான்களை சமாளிக்க முடியாமல் ஆப்கான் அரசு படை திணறி வருகிறது.
 
இதே நிலையில் தலிபான்கள் முன்னேறிச் சென்றால், அவர்கள் தலைநகர் காபூலை 30 நாட்களில் தனிமைப்படுத்த முடியும், 90 நாட்களில் கைப்பற்றலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

அதேசமயம், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் முழு பலத்துடன் பதிலடி கொடுக்கும்பட்சத்தில் தலிபான்களின் வேகத்தை மாற்ற முடியும் என்றும் அந்த அதிகாரி கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தானின் 65 சதவீத பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். 11 மாகாண தலைநகரங்களில் முழு ஆதிக்கம் செலுத்துவதாக ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடகிழக்கு மாகாணமான பதக்ஷானில் உள்ள ஃபைசாபாத் நகரம், தலிபான்களால் கைப்பற்றப்பட்ட எட்டாவது மாகாண தலைநகர் ஆகும்.

 

Tags :

Share via