கூண்டுக்கிளியாக இருக்கும் சிபிஐ-க்கு  சுதந்திரம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

by Editor / 18-08-2021 04:19:41pm
கூண்டுக்கிளியாக இருக்கும் சிபிஐ-க்கு  சுதந்திரம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு 


கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கமாறு இந்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற 300 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கை, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற தேவையான சட்டத்தை உருவாக்க இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


சிபிஐக்கு தேவையான நிதியை ஓராண்டிற்குள் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்ற நீதிபதிகள் அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI) மற்றும் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு போலீசைப் போல, நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சிபிஐக்கு வழங்கப்பட வேண்டும் என்றனர். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர். இது தொடர்பான அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சிபிஐ இயக்குநர் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via