புளியந்தோப்பு அடுக்குமாடி கட்டிடத்தை  சரிசெய்ய நடவடிக்கை:  அமைச்சர் தா.மோ.அன்பரசன்

by Editor / 18-08-2021 04:27:42pm
புளியந்தோப்பு அடுக்குமாடி கட்டிடத்தை  சரிசெய்ய நடவடிக்கை:  அமைச்சர் தா.மோ.அன்பரசன்

புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.


சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து, அங்கு சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விமர்சித்திருந்தார்.


இந்நிலையில், இக்கட்டிடத்தின் தரத்தை சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சிறப்புக்குழுவின் ஆய்வறிக்கையை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டி:


"2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் அது. 864 வீடுகள் இருக்கின்றன. சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இது கட்டி முடிக்கப்பட்டவுடன் இந்த கட்டிடத்தை கோவிட் சிகிச்சைக்காக மாநகராட்சி பயன்படுத்தியது. சமீபத்தில் நான் அங்கு சென்று ஆய்வு செய்தேன். அப்போது, சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியது தெரியவந்தது. அதனை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்றும், ஆடி மாதத்துக்குப் பிறகு மக்களை குடியமர்த்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.
பக்கத்திலேயே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் கூவம் நதிக்கரையில் வசிப்பவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ள வீடுகள். இந்த வீடுகளுக்கு பயனாளிகள் பங்கு கொடுக்க வேண்டியதில்லை. இது தான் பிரச்சினை. கே.பி.பார்க் மக்கள், தங்களிடம் வீடுகளுக்காக பயனாளிகளின் பங்காக ஒன்றரை லட்சம் வசூலிக்கப்படுவதை, இந்த விவகாரத்துடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்புகின்றனர். தங்களுக்கும் இலவசமாக வீடுகள் வழங்க வேண்டும் என, சிலர் பிரச்சினை செய்கின்றனர்.


சென்னை ஐஐடி இந்த கட்டுமானம் குறித்து ஆய்வு செய்துவருகிறது. நிபுணர் குழு அறிக்கை கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் சரிசெய்யப்படும். ஒப்பந்ததாரரோ, அதிகாரிகளோ யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சிதிலமடைந்ததை சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன".இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via