ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இலங்கை மக்களை மீட்க உதவ வேண்டும்- இந்தியாவிற்கு இலங்கை கோரிக்கை

by Editor / 23-08-2021 04:52:21pm
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இலங்கை மக்களை மீட்க உதவ வேண்டும்- இந்தியாவிற்கு இலங்கை கோரிக்கை

தாலிபான்கள் வசம் போயுள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடிமக்களை வெளியேற்ற உதவுமாறு இலங்கை அரசு இந்தியாவிடம் கேட்டுள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து 'ஆழ்ந்த அக்கறை' கொண்டிருப்பதாகவும், அங்குள்ள நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அரசு கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பே அதன் முன்னுரிமை என்று வலியுறுத்திய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகளின் அரசுகளை தனது குடிமக்களை வெளியேற்ற உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

"ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பும், இலங்கைக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதே எங்களின் முதன்மையான நோக்கம். ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை வெளியேற்றி அழைத்து வர, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கு உதவுமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த இலங்கை மக்கள் எண்ணிக்கை 86. இதுவரை அங்கிருந்து, 46 பேர் வெளியேற்றப்பட்டனர், 20 பேர் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 20 பேர் அங்கேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தாலிபான்கள் பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும் எனவே எந்த வெளிநாட்டினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று அவர்கள் கூறியதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

"ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய வழிமுறையில் அனுமதிக்கபட்டபடி, பெண்கள் வேலைக்கு போகலாம், பெண்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று தாலிபான்கள் அளித்த உறுதிமொழிகளைக் கண்டு இலங்கை அரசு மகிழ்ச்சியடைகிறது. அதேநேரம், பாதுகாப்பு, அனைத்து மக்களின் உரிமைகள் ஆகியவற்றை தாலிபான்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஆப்கானிஸ்தானை தீவிரவாதிகள் தங்களுக்கு ஏற்ற புகலிடமாக மாற்றிவிடக் கூடாது. போதைப் பொருள் வணிகம் பெருகிவிடக் கூடாது என்ற விஷயத்தில் இலங்கைக்கு கவலை இருக்கிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் இந்தியா உட்பட பல நாடுகளின் உதவியை இலங்கை கோரியுள்ளது, ஆனால், இந்தியர்கள் அனைவரும் இன்னும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, "தாலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதற்கு நமக்கு எந்த ஒரு நியாயபூர்வமான காரணங்களும் கிடையாது. ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை நாட்டு தூதரகம் மூடப்பட வேண்டும். வேறு நாட்டில் அதை அமைக்க வேண்டும் . ஆப்கானிஸ்தானில் இருந்த மிகப்பழமையான பாமியன் புத்தர் சிலையை தாலிபான்கள் அழித்துவிட்டனர். இந்த மண்டலத்தில் தீவிரவாதம் தனது தலையை உயர்த்துவதற்கு உதவுவதில் நாமும் ஒருவராக இருக்க போகிறோமா என்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்." என்று இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.

 

 

 

 

Tags :

Share via