சசிகலா தொடர்புடைய பையனூர் பங்களா முடக்கம்

by Editor / 09-09-2021 09:25:34am
சசிகலா தொடர்புடைய பையனூர் பங்களா முடக்கம்

கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலாவுக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனைக்குப்பிறகு 2019ஆம் ஆண்டு சசிகலாவுக்கு சொந்தமான 1200 கோடி சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கினர்.

அதன்பிறகு பினாமி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போயஸ் கார்டனில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு, கோடநாடு தேயிலை எஸ்டேட் உட்பட சசிகலா தொடர்புடைய 65 சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கி நோட்டீஸ் ஒட்டினர்.

இந்நிலையில் மாமல்லபுரம் அருகேயுள்ள பையனூரில் 22 ஏக்கரில் உள்ள பங்களா உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பல்வேறு ஏக்கர் கணக்கில் வாங்கப்பட்டுள்ள சொத்துகளை பிரித்து முடக்கம் செய்திருப்பதாக நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.முடக்கப்பட்ட சொத்தின் இடத்தில் யாரும் நுழையவோ விற்கவோ வருமான வரித்துறை தடை விதித்துள்ளது. மேலும், சசிகலா, தீபக், தீபா ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பினாமி சொத்துகள் இல்லை என்பதை நிரூபிக்க 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via