போலீசாரை கீழே தள்ளிவிட்ட அதிமுகவினர்

by Editor / 16-09-2021 12:19:33pm
போலீசாரை கீழே தள்ளிவிட்ட அதிமுகவினர்

அதிமுகவின் முக்கிய பிரமுகர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அண்மையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கே.சி வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிந்துள்ளது. அந்த எஃப்.ஐ,ஆரில், அவர் 2016 முதல் 2021 வரை 28.78 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் வாங்கியிருப்பதாகவும் வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து சேர்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்குவது ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது.

இந்த நிலையில், வீரமணி வீட்டில் ரெய்டு நடத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் போலீசாரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் இருக்கும் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசை கண்டித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது போலீசாரை கீழே தள்ளிவிட்டு வேனில் இருந்து இறங்கிய அதிமுகவினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via