புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அவகாசம் கோரப்படும் தமிழிசை

by Editor / 20-10-2021 11:10:48am
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அவகாசம் கோரப்படும்  தமிழிசை

புதுச்சேரியில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. அக்டோபருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இட ஒதுக்கீடு குளறுபடிகளை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வார்டு குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவு பிறப்பித்ததோடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டை அரசு திரும்பப் பெற்றது. ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்தக் கூடாது என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி தேர்தலை நடத்த 4 மாதகால அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. அந்த வழக்கு 21ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் புதுச்சேரியில் தேர்தல் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மேல்சாத்தமங்கலம் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான வழக்குகள் 21ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இட ஒதுக்கீடு அளித்து தான் தேர்தல் நடத்த வேண்டும் என நினைப்பது வரவேற்கத்தக்கது. குறுகிய காலத்திற்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் கூறியிருந்ததால் இட ஒதுக்கீட்டிற்கான பட்டியல் தயார் செய்யப் படாத சூழ்நிலையில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதை எடுத்துக் கூறி அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் வழக்கு நகரும் திசையைப் பொறுத்து நடத்தை விதிமுறைகளை நீக்க அனுமதி பெற வாய்ப்பு உள்ளது. 

 

Tags :

Share via