புதுவை மாநிலங்களவை எம்.பி. சீட் யாருக்கு?  என்.ஆர். காங்கிரஸ்–பாஜக இழுபறி

by Editor / 20-09-2021 04:48:28pm
புதுவை மாநிலங்களவை எம்.பி. சீட் யாருக்கு?  என்.ஆர். காங்கிரஸ்–பாஜக இழுபறி

புதுவை முதல்வர் என். ரெங்கசாமியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார். எதற்காக இந்த சந்திப்பு என்று கேட்டதற்கு இரு தரப்பினரும் பதில் கூற மறுத்து விட்டனர்.


புதுவையில் தேர்தல் நடைபெற உள்ள ஒரு மாநிலங்களவை எம்.பி., இடத்தை யார் பகிர்ந்து கொள்வது என்பதில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பாஜக இழுபறி நீடிக்கிறது.


புதுவையில் ஒரு மாநிலங்களவை எம்.பி.,யைத் தேர்ந்தெடுக்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி., தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்கு 22 ந் தேதி கடைசி நாள். இந்த நிலையில் அந்த இடத்திற்கு யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது இன்னமும் முடிவாகவில்லை.


ஒரு மாநிலங்களவை எம்.பி., இடத்தை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டு முதல்வர் என். ரெங்கசாமியிடம் பாஜக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது . எம்.பி. சீட்டு யாருக்கு என்பது தொடர்பான எந்த உறுதி மொழியையும் இதுவரை முதல்வர் என். ரெங்கசாமி கொடுக்கவில்லை.


இதற்கிடையில் சென்னை தொழில் அதிபர் ஐசரி கணேஷ்  முதல்வர் என். ரெங்கசாமியைச் சந்தித்து பேசினர். புதுவை மாநிலங்களவை எம்.பி., சீட்டில் பாஜக சார்பில் போட்டியிட தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று ஐசரி கணேஷ் கோரினார். அவருக்கும் பதில் ஏதும் சொல்லாமல் அவரை முதல்வர் என். ரெங்கசாமி அனுப்பிவிட்டார்.


மாநிலங்களவை எம்.பி., சீட்டை பாஜகவுக்கு பெற்றுத் தரவேண்டும் என்று பாஜக மேலிட தலைவர்களிடம் கேட்க பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயமும் பாஜக மாநில தலைவர் சாமிநாதனும் டெல்லி சென்றிருக்கிறார்கள்.இந்தநிலையில் மாநிலங்களவை எம்.பி., தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு முன்னாள் அமைச்சரும் முதல்வர் என். ரெங்கசாமிக்கு நெருக்கமானவரும் முதல்வர் என். ரெங்கசாமி ஏனாம் தொகுதியில் போட்டியிட தனது தொகுதியை விட்டுக்கொடுத்து தேர்தல் பணியாற்றியவருமான மண்ணாடி கிருஷ்ணாராவுக்கே கிடைக்கும் என்று என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் கூறிவருகிறார்கள்.


எம்.பி., இடத்தை யார் பகிர்ந்து கொள்வது என்பதில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பாஜக இடையே தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் என். ரெங்கசாமி ஆலோசிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் திமுக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்ன நிலை எடுப்பது என்பது பற்றி ஆலோசிக்க ஜெகத்ரட்சகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

 

Tags :

Share via