4 கோடி செலவில் விழுப்புரம் மாவட்டத்தில் தியாகிகளின் மணிமண்டபம்

by Editor / 02-09-2021 08:36:22pm
 4 கோடி செலவில் விழுப்புரம் மாவட்டத்தில் தியாகிகளின் மணிமண்டபம்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் 15-வது நாள் கூட்டம் நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், ``110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். சமூக நீதிக் கொள்கையின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் நமது தமிழகம். வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இட ஒதுக்கீடு, சாதி ரீதியாக ஒதுக்கீடு என்று எந்த பெயர் சொல்லி அழைத்தாலும், சமூகநீதி என்று ஒற்றை பொருள் தரும் சொல்லை வேறு எந்த சொல்லும் தந்திடாது. சமூகநீதிக் கொள்கை தான் திராவிட இயக்கம். தமிழகத்திற்கு மட்டுமில்லை, இந்திய ஒன்றியத்திற்கே சமூகநீதி என்ற தத்துவத்தைக் கொடையாக வழங்கியது திராவிட இயக்கம் தான்.சமூகநீதிக் கொள்கையை அடைய பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடை உறுதிப்படுத்தியதும், காலத்தின் தேவைக்கேற்ப அளவு மாற்றம் பெற்றுத் தந்ததும். கடந்த அரை நூற்றாண்டு காலமாக வரலாற்றிலே இருக்கக்கூடிய சரித்திர சான்றை மறைக்க முடியாத சாசனமாக அமைத்துள்ளது. 1987-ம் ஆண்டு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில் பலியானவர்கள் 21 பேர். அந்தத் தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூர்ந்து 4 கோடி செலவில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.

 

Tags :

Share via