ஐ.நா.சபை கூட்டம்,  மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ஜோ பைடனையும் சந்திக்கிறார்

by Editor / 22-09-2021 04:16:30pm
ஐ.நா.சபை கூட்டம்,  மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ஜோ பைடனையும் சந்திக்கிறார்

 


ஐ.நா. சபை கூட்டம் மற்றும் குவாட் உச்சி மாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஜனாதிபதி ஜோ பைடனையும் அவர் சந்தித்து பேச உள்ளார்.


இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து 'குவாட்' அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில் வாஷிங்டன்னில் செப்டம்பர் 24 ந்தேதி நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து பேச உள்ளார்.


குவாட் உச்சி மாநாட்டுக்கு இடையே (24-ந்தேதி), வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசுகிறார். அப்போது இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல், ஆப்கானிஸ்தான் நிலவரம், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதிக்கிறார்கள்.


ஜோ பைடனை சந்திப்பதற்கு முன்பாக நாளை (23ந்தேதி), இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை மோடி சந்தித்து பேச உள்ளார். கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதியான பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி பேசி இருந்தாலும், இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை. இதனைதொடர்ந்து அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.


வாஷிங்டன் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, நியூயார்க் நகருக்கு செல்கிறார். அங்கு 25ந்தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் 76வது அமர்வில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் அவர் 100க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் மத்தியில் பேசுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி  டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டு சென்றார்.
அமெரிக்கா கிளம்பும் முன்னர் டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:


அதிபர் பைடன் அழைப்பை ஏற்று, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் அமெரிக்கா செல்கிறேன். சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், இந்தியா அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பிற்கான திட்டங்களை ஆராயவும் துணை அதிபர் கமலா ஹாரீசை சந்திப்பதில் ஆர்வமாக உள்ளேன்.


அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுகோவுடன் இணைந்து குவாட் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளேன். மார்ச் மாதம் நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பலன்களை ஆராய உள்ளோம். சர்வதேச பிரச்சினைகளை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்ற உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி திரும்புகிறார்.

 

Tags :

Share via