மனதை அமைதியாகும் திருச்சி  மலைக்கோட்டை!

by Editor / 22-09-2021 04:52:50pm
மனதை அமைதியாகும் திருச்சி  மலைக்கோட்டை!

 

திருச்சி மாநகரத்தின் முக்கியமான மற்றும் முதன்மையான அடையாளமாக திகழ்கிறது மலைக்கோட்டை. திருச்சியை மலைக்கோட்டை மாநகர் என்றழைக்கும் அளவுக்கு பெருமையும், சிறப்பும் மிக்கதாக திகழ்கிறது.மலைக்கோட்டை கோயில், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்திலும் உள்ளது.

தொன்மை வாய்ந்த மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் ஆகியவற்றை கொண்ட ஒரு தொகுதியாக மலைக்கோட்டை திகழ்கிறது. நடுவில் ஒரு மலையும், அதனை சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.. திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது. இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது..

திருச்சி மலைக்கோட்டை முதன்முதலாக விஜயநகரப் பேரரசால் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடகப் போர்களின்போது ஆங்கிலேயர்கள் இதனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதற்கு முன்பாக,. பல்லவர்கள் இப்பகுதியைப் பாண்டியர்களிடம் இழந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இப்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின் விஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது.

14 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்புக்கு பின்னர் இப்பகுதி தில்லி சுல்தான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இவர்களைத் துரத்திவிட்டு விஜயநகரப் பேரரசு இப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தியது. விஜயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, அதன் சார்பில் இப்பகுதியில் பிரதிநிதிகளைக செயல்பட்ட மதுரை நாயக்கர்கள் இப்பகுதியைத் தமது நேரடி ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்தனர்.மதுரை நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் தான் திருச்சி செழித்திருந்தது. அத்துடன் திருச்சி மாநகர் இன்றைய நிலைக்கு வளர்ந்ததற்கான அடிப்படைகளும் அப்போதுதான் உருவாயின. நாயக்கர்களே மலைக்கோட்டைக் கோயில் குளத்தையும், முக்கியமான சுவர்களையும் கட்டினர். பின்னர் திருச்சியே அவர்களின் தலைநகரமுமானது.

மலைக்கோட்டையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், இடையே தாயுமானவர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இவை தவிர, பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.

மலைக்கோட்டை குன்றின் மீதுள்ள மூன்று சிகரங்களில் சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோர் வீற்றிருந்ததாகவும், ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் இடையே ஏற்பட்ட கடும்போரின் விளைவாக, இமயமலைத் தொடரிலிருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும் பறந்து சென்ற மலைத் தொகுதிகளில் இது ஒன்று என நம்பப்படுகிறது.மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும் தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.மலையின் உயரம் நில மட்டத்திலிருந்து உச்சிப் பிள்ளையார் சிகரம் வரை 273 அடி. 178 படிகள் ஏறி முடித்தால் ஸ்ரீதாயுமானவர் திருக்கோயிலை அடையலாம். அடிவாரத்தில் இருந்து 417 படிகள் ஏறினால் உச்சிப் பிள்ளையார் கோயிலை அடையலாம். காஞ்சிப் பெரியவாளுக்கு மிகப் பிடித்த ஆலயங்களில் ஒன்று தாயுமானவர் திருக்கோயில்.

இங்கு நவக்கிரகங்கள் அனைவரும் சூரியனை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சூரியனுக்கும் உஷாதேவிக்கும் இங்கு திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தம்பதி சமேதராக இங்கு காட்சி தருகின்றனர்.
 

 

Tags :

Share via