மடாதிபதி தற்கொலை : சிபிஐ விசாரணைக்கு உ.பி.அரசு பரிந்துரை

by Editor / 23-09-2021 03:26:23pm
மடாதிபதி தற்கொலை : சிபிஐ விசாரணைக்கு உ.பி.அரசு பரிந்துரை

 


 சாமியார் ஒருவரின் மர்ம மரணம் உத்தர பிரதேசத்தை உலுக்கி உள்ளது. மஹந்த் நரேந்திர கிரி என்ற சாமியார் மர்மமான முறையில் மரணம் அடைந்தது அங்கு இந்து மத சாமியார்கள், துறவிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஆளும் பாஜகவின் முதல்வர் ஆதித்யநாத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பும், அதிருப்தியும் சமமாக உள்ளதாகவே இதுவரை கணிப்புகள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவலை ஆதித்யநாத் கட்டுப்படுத்த தவறியதும் அங்கு கங்கையில் பிணங்கள் மிதந்ததும் இப்போதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அதே சமயம் பாஜக ஆதரவாளர்களும் , தீவிர இந்துத்துவா ஆதரவாளர்களும் ஆதித்யநாத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு கிடைத்த ஆதரவு போலவே சட்டசபை தேர்தலிலும் கிடைக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. இந்து மக்களின் வாக்குகளை மொத்தமாக தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் பாஜக இருக்கிறது. இதற்குத்தான் தற்போது இடைஞ்சலாக மஹந்த் நரேந்திர கிரி மரணம் வந்து நிற்கிறது..


மஹந்த் நரேந்திர கிரி மரணம் அங்கு இந்துக்கள் இடையிலும், பல்வேறு சாமியார்கள் இடையிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் உடனடியாக குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கைகளை வைக்க தொடங்கி உள்ளது. அகில பாரதிய அகண்ட பரிஷத் அமைப்பின் தலைவரான மஹந்த் நரேந்திர கிரி கடந்த திங்கள் கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டார்..


அவர் தன்னுடைய அறையில் தூக்கில் மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதற்காக அவர் தற்கொலை கடிதம் ஒன்றையும், வீடியோ ஒன்றையும் எடுத்து வைத்து இருந்தார். இந்த தற்கொலை வீடியோவில் தன்னுடைய மரணத்திற்கு தன்னுடைய சிஷ்யர்கள் சாமி அனந்திரி கிரி, ஆதித்ய பிரசாத் திவாரி, அவரின் மகன் சந்தீப் திவாரி ஆகியோர்தான் காரணம் என்று வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார். அதோடு இவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் இதில் எழுதி இருக்கிறார்.


அதில், என்னை பெண் ஒருவருடன் தொடர்புபடுத்தி போட்டோ ஒன்றை மார்ப் செய்து வெளியிட போவதாக இவர்கள் மூவரும் மிரட்டினார்கள். என் புகழுக்கு இழுக்கு விளைவிக்கும் வகையில் இவர்கள் இப்படி திட்டம் வகுத்தனர். எனக்கு மானம்தான் முக்கியம். என் ஆன்மீக வாழ்க்கைக்கு களங்கம் விளைவித்தால் நான் உயிரோடு இருக்க முடியாது. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று இவர் கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதையடுத்து சாமியார் அனந்திரி கிரி, ஆதித்ய பிரசாத் திவாரி, அவரின் மகன் சந்தீப் திவாரி ஆகியோர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவர்கள் ஏன் சாமியார் நரேந்திர கிரியை மிரட்டினார்கள் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நரேந்திர கிரியின் உடல் பிரதேச பரிசோதனையின் அவரின் கழுத்தில் தூக்கு கயிறு நெருக்கிய "வி" அடையாளமும் , சுவாசம் முட்டி அவர் மரணம் அடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் சாமியார் நரேந்திர கிரி மரணத்தை வைத்து சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே ஆதித்யானத்தை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளன.

இவரின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இவர் தற்கொலை செய்யவில்லை. வேறு ஒரு காரணத்திற்காக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். இந்துக்களை காப்பதாக கூறும் யோகி அரசால் நரேந்திர கிரியை காக்க முடியவில்லை. இந்து சாமியாருக்கே பாதுகாப்பு இல்லை. இதில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
 

 

Tags :

Share via