அரசை தேடி மக்கள் வந்த காலம் போய்,  தற்போது மக்களை தேடி அரசு வருகிறது - மு.க.ஸ்டாலின்

by Editor / 24-09-2021 03:36:37pm
அரசை தேடி மக்கள் வந்த காலம் போய்,  தற்போது மக்களை தேடி அரசு வருகிறது - மு.க.ஸ்டாலின்

வானுயர வள்ளுவருக்குச் சிலையும் வைப்போம் - இலட்சக்கணக்கானவர்க்கு, வேலை கொடுக்க டைடல் பார்க்கும் அமைப்போம் - அதே நேரத்தில் ஏழைகளின் பசிக்கு உணவும் அளிப்போம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
காது கேளாதோர் வாரத்தையொட்டி மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக ரூ.98.80 இலட்சம் மதிப்புள்ள உயர்தர செவித் திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவ மையத்தை திறந்து வைத்து முதல்வர் ஆற்றிய உரையில், உலக காதுகேளாதோர் வாரம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 20 முதல் 26 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வானுயர வள்ளுவருக்குச் சிலையும் வைப்போம் - இலட்சக்கணக்கானவர்க்கு, வேலை கொடுக்க டைடல் பார்க்கும் அமைப்போம் - அதே நேரத்தில் ஏழைகளின் பசிக்கு உணவும் அளிப்போம்.
இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதையும் மறக்காமல் வழங்குவோம். இதுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசின் இலட்சியமாக இருக்கிறது. வானளாவிய வளர்ச்சி - பல்லாயிரம் கோடி திட்டங்கள் - பறக்கும் சாலைகள் ஆகியவை ஒரு பக்கம் அமைத்தாலும் - இன்னொரு பக்கத்தில் குடிசைகளை மாற்றி அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்ற அந்த நிலையிலும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காது நுண் எலும்புக் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை இதுவரையில் 4,101 குழந்தைகளுக்குச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 327 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
பழுதடைந்த உபகரணங்களை மாற்றித் தருவதற்காக 3.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 572 பேருக்கு 108 கோடி ரூபாய் செலவில் புதிய காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மேலும் தொடருவதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நவீன கருவிகளை வாங்குவதற்கு 10 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சில வாரங்களுக்கு முன்பு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் அழைப்பையேற்று கிருஷ்ணகிரிக்கு சென்றேன். அங்கே மக்கள் பயன்பெறும் வகையிலே மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இன்றைக்கு அந்தத் திட்டம்தான் தமிழ்நாடு அரசுக்குப் மிகப் பெரிய பேரும் புகழும் ஈட்டித் தந்து கொண்டு இருக்கிறது என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நாள்தோறும் கிராமம் கிராமமாக - தொகுதித் தொகுதியாக - தெருத் தெருவாக நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறையினர் சென்று - மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 10 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலமாகப் பயனடைந்துள்ளார்கள்.
மருத்துவமனைக்கு வர முடியாதவர்கள் - பணம் இல்லாதவர்கள் - தீராத நோயாளிகள் - ஆகியோருக்கு அவர்களது கவலை போக்கும் திட்டமாக இந்தத் திட்டம் இருக்கிறது. அரசைத் தேடி மக்கள் வந்த காலம் இருந்தது - இப்போது அதை மாற்றி - மக்களைத் தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது. இந்த மாற்றத்துக்கு நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கொண்டு இருக்கக்கூடிய நம்முடைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். அந்த அளவிற்கு அவர் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்.
சட்டமன்றத்தில் எந்த அமைச்சர்களையும் எதிர்கட்சியினர் புகழ்ந்து பேசுவது கிடையாது. நம்முடைய மா.சு அவர்களை தான் சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசுகிறார்கள். பா.ஜ.க.வைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சட்டமன்றத்தில் மாசு இல்லாதவர் மா.சு என்று பாராட்டினார். அவருக்குத் துணை நின்று பணியாற்றி கொண்டு இருக்கக்கூடிய அதிகாரிகளையும் நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.என்று கூறினார்.

 

Tags :

Share via