ஊடகத்தின் மீது தமிழக பாஜக மரியாதைகொண்டிருக்கிறது: அண்ணாமலை

by Editor / 29-09-2021 09:28:06am
ஊடகத்தின் மீது தமிழக பாஜக மரியாதைகொண்டிருக்கிறது: அண்ணாமலை

பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாஜக மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பகிர்ந்த ட்வீட்களில், "ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு.

நல்லவற்றை எடுத்துரைத்து, அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி, மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகமும் பத்திரிக்கைகளும் திகழ்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது அந்த அக்கறையும் ஆதரவும் பாரதிய ஜனதா கட்சிக்கு தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது.

நன்றி… வணக்கம்!" என்று பதிவிட்டுள்ளார்.

அண்மையில் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஹெச்.ராஜாவை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், பாஜக மேலிடம் ஹெச்.ராஜாவின் பேச்சை கண்டுகொள்வதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

இத்தகைய பின்னணியில், பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாஜக மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via