பாலியல் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஐகோர்ட் உறுதி

by Editor / 30-09-2021 10:51:34am
பாலியல் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஐகோர்ட் உறுதி

பல பெண்களை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்தது. எனினும், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய ஆறு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் 2006ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக சித்ரதுர்காவை சேர்ந்த உமேஷ் ரெட்டி, 45 என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் 20க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு 2006ல், பெங்களூரு அமர்வு நீதிமன்றத்தில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.அதை, 2007ல் ஐகோர்ட்டும் உறுதி செய்தது

அதைத் தொடர்ந்து, 2011ல் சுப்ரீம் கோர்ட்டில் செய்த மேல்முறையீட்டு வழக்கிலும் உமேஷ் ரொட்டிக்கு துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.இதை அடுத்து, பல முறை அவர் கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருந்தார். அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டில் மறுபரிசீலனை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் மீண்டும் ஐகோர்ட்டில் மீண்டும் மன்னிப்பு கோரும் மனு, உமேஷ் ரெட்டி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர், '10 ஆண்டாக நான் தனிமை சிறையில் உள்ளேன்.

மன்னிப்பு கடிதத்தின் மீதான பரிசீலனையும் தாமமாகி கொண்டே வருகிறது. எனவே, எனக்கு விதிக்கப்பட்டுள்ள துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும்' என கோரி இருந்தார்.அந்த மனு, நீதிபதிகள் பிரதீப் சிங் எரூர், அரவிந்த் குமார் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விசாரணையில், உமேஷ் ரெட்டிக்கு துாக்கு தண்டனையை மீண்டும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.எனினும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வசதியாக ஆறு வார காலம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், ஆறு வாரம் வரை அவருக்கு துாக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

 

Tags :

Share via