டாடாவின் வசம் சென்றதா  ஏர் இந்தியா? - மத்திய அரசு மறுப்பு

by Editor / 01-10-2021 05:23:51pm
டாடாவின் வசம் சென்றதா  ஏர் இந்தியா? - மத்திய அரசு மறுப்பு

இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், கடுமையான கடனில் சிக்கித் தவிக்கிறது. தற்போது 43,000 கோடி கடனில் சிக்கித் தவிக்கும் அந்த நிறுவனத்தை, கடந்த 2018ஆம் ஆண்டே விற்க மத்திய அரசு முயற்சி செய்தது. ஆனால், அப்போது ஏர் இந்தியாவை வாங்க யாரும் முன்வரவில்லை.


இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் டாடா குழுமம் இறங்கியது. கடந்த மாதம் 15ஆம் தேதி டாடா குழுமம், ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தொகையை சமர்ப்பித்தது.


இந்நிலையில், டாடா குழுமத்தின் ஏலத்தொகையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், இந்த தகவலை இந்திய அரசு மறுத்துள்ளது. இந்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளர், ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தொகையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என தெரிவித்துள்ளார்.


மேலும், இதுதொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும்போது அது ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தப்படும் எனவும் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via