நெல் கொள்முதல்:ஆன்லைன் பதிவு  இல்லாமலும் நெல் வழங்கலாம் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு

by Editor / 02-10-2021 07:38:21pm
நெல் கொள்முதல்:ஆன்லைன் பதிவு  இல்லாமலும் நெல் வழங்கலாம் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு

ஆன்லைன் பதிவு இல்லாமலும் நெல் வழங்கலாம் என்று அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தம் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சியில் சமூக நலத்துறை சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி 250 கர்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், பாத்திரம் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கினார்.


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நெல் விவசாயிகள் தங்களது விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்த பிறகே, நெல் கொள்முதல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆன்லைன் பற்றிய விவரமறியாத விவசாயிகள் நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்துக்குச் சென்று எவ்வித இடையூறும் இன்றி தங்களது விவரங்களைப் பதிவு செய்து, நெல் மூட்டைகளை வழங்கலாம். எனவே மத்திய அரசின் அறிவிப்பு குறித்து விவசாயிகள் அச்சமடைய வேண்டாம்.


மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்கும் வகையில், தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நெல் மூட்டைகளை, டெல்டா மாவட்டங்கள் தவிர பிறப் பகுதிகளில் கூட்டுறவுத் துறையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தாமதமின்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்லவும், காலியாக உள்ள சர்க்கரை ஆலைகள் மற்றும் அரசு கட்டடங்களில் இடங்கள் ஒதுக்கப்பட்டு தயாராக இருக்கின்றன.


கடந்த ஆட்சியில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும்போது விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் விவசாயிகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் அறிவுறுத்தியதன் பேரில், நெல் கொள்முதல் முறையாக நடந்து வருகிறது. தவறு செய்த அதிகாரிகள் மீது நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

 

Tags :

Share via