சட்டசபை தேர்தல் செலவு எவ்வளவு?

by Editor / 04-10-2021 09:54:24am
சட்டசபை தேர்தல் செலவு எவ்வளவு?

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.திரிணமுல் காங்., 154 கோடி ரூபாயும், தி.மு.க., 114 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளன. அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.இணையதளம்தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம், கேரள சட்டசபைகளுக்கு மார்ச், ஏப்., மாதங்களில் தேர்தல் நடந்தது.

இதில், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க., வென்றது; ஸ்டாலின் முதல்வரானார். தேர்தல் விதிகளின்படி பிரசாரத்துக்கு கட்சிகள் செலவிட்ட தொகைக்கான கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி கட்சிகள் தாக்கல் செய்துள்ள கணக்குகளை, தன் இணையதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. பா.ஜ.,வின் கணக்குகள் மட்டும் வெளியிடப்படவில்லை. தேர்தல் கமிஷன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, திரிணமுல் காங்., 154.28 கோடி ரூபாயை பிரசாரத்துக்காக செலவிட்டுள்ளது. இதில், 79.66 கோடி ரூபாய் கட்சியின் சார்பிலும், 74.61 கோடி ரூபாய் வேட்பாளர்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.

கட்சி செலவிட்டுள்ள தொகையில், 33.02 கோடி ரூபாய் நட்சத்திர பேச்சாளர்களின் பயணச் செலவுக்காக செய்யப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்காக, 11.93 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.வியூக நிபுணர்திரிணமுல் காங்.,கைப் போலவே, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரின் உதவியுடன், தேர்தலை தி.மு.க., சந்தித்தது. அந்தக் கட்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசாரத்துக்காக, 114.14 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. அதில், 39.78 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகவும், 54.47 கோடி ரூபாய் வேட்பாளர்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.

தேர்தலின்போது ஆட்சியில் இருந்த, அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டு உள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. அதில், 56.65 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காக செலவிடப் பட்டுஉள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., செலவிட்ட கணக்குகள் இணையதளத்தில் இதுவரை பதிவேற்றவில்லை.ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து, 84.93 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக, காங்., தன் கணக்கில் தெரிவித்துள்ளது.ஐந்து மாநிலங்களையும் சேர்த்து, இந்திய கம்யூ., 13.19 கோடி ரூபாயும், அசாமில் போட்டியிட்ட அசாம் கன பரிஷத், 15.16 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via