பாரதிய ஜனதா தமிழகத்தில் காலூன்ற முடியாது -  ஜி ராமகிருஷ்ணன் 

by Editor / 04-10-2021 07:05:30pm
 பாரதிய ஜனதா தமிழகத்தில் காலூன்ற முடியாது -  ஜி ராமகிருஷ்ணன் 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.


அவர் நெல்லை ராமயன்பட்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,   மத்திய அரசு மாநில அரசு பணிகளில் , பொதுத்துறை நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம் கூறியுள்ள அடிப்படை உரிமையாகும். தமிழ்நாட்டில் 1952ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று தீர்ப்பளித்தது. இதனை அடுத்து நடந்த கடும் போராட்டத்திற்குப் பின்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் திருத்தமே கல்வியில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதே. பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களுக்கு பிறப்பால் ஏற்படுத்தப்பட்ட அநீதியின் காரணமாகவே அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது கட்டாயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும், இது வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கூறினால் அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

 பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக மேஜிக் அரசியல் செய்துவருவதாக பேசி வருகிறார். உண்மையில் இந்தியாவில் மேஜிக் செய்து அரசியல் பண்ணுகிறவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் தான், கர்நாடகாவில் அங்கு இருக்கும் ஆட்சியை கவிழ்த்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து அங்கும் பிஜேபி ஆட்சிக்கு வந்தது, பாண்டிச்சேரியில் ஆளுநரை வைத்து ஆட்சியை கலைத்தார்கள், எனவே ஜாதி வெறி, மத வெறியை ஊட்டி  மேஜிக் செய்து ஆட்சியைப் பிடிப்பது பாரதிய ஜனதா கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் கிடையாது. இந்த மேஜிக் செய்தாலும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற முடியாது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு துறைகளில் மக்கள் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர், ஆட்சி பாராட்டும் வகையில் உள்ளது குறிப்பாக உயர்கல்வியில் பொறியியல் படிப்பிற்கு வரும் அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது இது போன்று பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்த படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via